வந்தவாசி அருகே மகனை காப்பாற்ற முயன்ற மூதாட்டி வெட்டி கொலை பேரனுக்கு போலீஸ் வலைவீச்சு
வந்தவாசி அருகே மகனை காப்பாற்ற முயன்ற மூதாட்டியை வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவான பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.
வந்தவாசி,
வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன். இவருடைய மனைவி காசியம்மாள்(வயது 70). பலராமன் கடந்த மாதம் இறந்துவிட்டார். இவரது சாவுக்கு உறவினர்கள் பலர் வரவில்லை என்று இவரது மகன் ரவி (43) நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு குடிபோதையில் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற பலராமனின் மற்றொரு மகனான பெருமாள் என்பவரின் மகன் அரிவாசன் (25), ஏன் இப்படி பேசுகிறாய்? என ரவியிடம் கேட்டுள்ளார்.
அப்போது ரவிக்கும், அரிவாசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அரிவாசன் கத்தியால் ரவியை குத்த வந்தார். அப்போது அவரை காப்பாற்ற வந்த காசியம்மாளை அரிவாசன் கத்தியால் வெட்டி கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த காசியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், வடவணக்கம்பாடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகுராணி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காசியம்மாளின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வடவணக்கம்பாடி போலீசில் ரவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாட்டியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பேரன் அரிவாசனை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story