இளம்பெண் கொலையில் காதலன் கைது வேறொரு வாலிபருடன் நெருங்கி பழகியதால் தீர்த்து கட்டியது அம்பலம்


இளம்பெண் கொலையில் காதலன் கைது வேறொரு வாலிபருடன் நெருங்கி பழகியதால் தீர்த்து கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 10 Feb 2019 10:30 PM GMT (Updated: 10 Feb 2019 5:28 PM GMT)

துமகூருவில் தலையில் கல்லைப்போட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த காதலனை போலீசார் கைது செய்தனர். வேறொரு வாலிபருடன் நெருங்கி பழகியதால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

துமகூரு, 

துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா உளியூர்துர்கா அருகே சந்தேமாவத்தூரு வனப்பகுதியில் கடந்த 3-ந் தேதி ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அந்த இளம்பெண்ணின் தலையில் கல்லைப்போட்டு மர்மநபர்கள் கொலை செய்திருந்தனர். முதலில் அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது. இது குறித்து உளியூர்துர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அந்த இளம்பெண், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அணியும் ஆடை அணிந்திருந்தார். அதன்மூலம் போலீசார் துப்பு துலக்கினர்.

அப்போது அவர், ெபங்களூரு கொரகுண்டேபாளையாவை சேர்ந்த அர்பிதா (வயது 19) என்பதும், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அவர் ஊழியராக பணியாற்றியதும் தெரியவந்தது. மேலும் அர்பிதாவும், பெங்களூரு பசவேசுவராநகர் கமலாநகரை சேர்ந்த லோகித் என்பவரும் காதலித்து வந்ததும், கடந்த 2-ந் தேதி அவர் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வேலைக்கு செல்லாமல் காதலன் லோகித்துடன் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, லோகித்தை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த லோகித்தை(21) உளியூர்துர்கா போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், பெங்களூருவில் உள்ள துணிக்கடையில் வைத்து லோகித்தும், அர்பிதாவும் முதலில் சந்தித்துள்ளனர். அதன்பிறகு, 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில், அர்பிதா பெட்ேரால் விற்பனை நிலையத்தில் வேலை செய்வது தொடர்பாக லோகித்திற்கும், அர்பிதாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் 2 பேரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அர்பிதாவுக்கு வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த லோகித் ஆத்திரமடைந்துள்ளார். பின்னர் கடந்த 2-ந் தேதி பெங்களூருவில் இருந்து குனிகல்லுக்கு அர்பிதாவை அழைத்து சென்ற லோகித், சந்தேமாவத்தூரு வனப்பகுதியில் வைத்து அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கைதான லோகித்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story