கூடலூர் அருகே, சுரங்கனார் நீர்வீழ்ச்சியில் குதித்து தொழிலாளி தற்கொலை
கூடலூர் அருகே உள்ள சுரங்கனார் நீர்வீழ்ச்சியில் குதித்து கேரள மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
கூடலூர்,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கடைசிகடவு பகுதியை சேர்ந்தவர் வனராஜ் (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இவர் உடல்நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இதனால் அவரால் வேலைக்கும் செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இடுக்கி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் கேரள போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கூடலூர் அருகே உள்ள சுரங்கனார் நீர்வீழ்ச்சியின் அருகில் ஒரு ஜோடி செருப்பு மட்டும் கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து கூடலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நீர்வீழ்ச்சி பகுதியில் சோதனையிட்டனர். அப்போது நீர்வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் தண்ணீர் தேங்கும் இடத்தில் பாறைகளின் இடையில் ஆண் பிணம் கிடப்பதை போலீசார் பார்த்தனர்.
உடனே பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த ஆவணங்களை போலீசார் சோதனையிட்ட போது அவர் கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த வனராஜ் என்பது தெரியவந்தது. பின்னர் அக்கம்பக்கத்தில் விசாரித்த போது அவர் நீர்விழ்ச்சி பகுதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து இடுக்கி போலீசாருக்கு கூடலூர் போலீசார் தகவல் கொடுத்தனர்.
அப்போது தான் வனராஜ் தற்கொலை செய்துகொண்ட விவரம் கேரள போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் வனராஜின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மன உளைச்சலில் இருந்த வனராஜ், வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலை செய்துகொண்டது கேரள போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Related Tags :
Next Story