நன்னிலம் பேரூராட்சியில் ரூ.3 கோடியில் பஸ் நிலைய விரிவாக்க பணிகள் அமைச்சர் காமராஜ் அடிக்கல் நாட்டினார்
நன்னிலம் பேரூராட்சியில் ரூ.3 கோடியில் பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்கு அமைச்சர் காமராஜ் அடிக்கல் நாட்டினார்.
நன்னிலம்,
நன்னிலம் பேரூராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கே.கோபால் எம்.பி. முன்னிலை வகித்தார்.
விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களின் தேவைகளை அறிந்து அதை முழுமையாக நிறைவேற்றுகிற அரசாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு திகழ்ந்து வருகிறது. சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மக்கள் நல திட்டங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
நன்னிலத்தில் அரசு கல்லூரி தந்து நன்னிலம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தொடர்ந்து குடவாசலில் அரசு கலை கல்லூரி, வலங்கைமானில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்பட்டு உள்ளது.
அந்தவகையில் இன்றையதினம் நன்னிலத்தில் ரூ.3 கோடி மதிப்பில் பஸ் நிலையம் விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையமானது 42 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 24 வணிக வளாக கடைகள் மற்றும் உணவகம், 2 பயணிகள் காத்திருப்பு கூடம், 10 பஸ் நிறுத்துமிடம், கழிவறை வசதி, 200 மீட்டருக்கு சுற்று சுவர் ஆகிய அனைத்து வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் உதவி கலெக்டர் முருகதாஸ், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராம.குணசேகரன், முன்னாள் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய துணைத்தலைவர் அன்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர் ராணிசுவாதிகோபால், நன்னிலம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பக்கிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story