கோடநாடு வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட திபு, பிஜின் கைது


கோடநாடு வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட திபு, பிஜின் கைது
x
தினத்தந்தி 11 Feb 2019 4:15 AM IST (Updated: 11 Feb 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட திபு, பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் படுகொலை செய்யப்பட்டார். மேலும் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும் ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் ஷயான், மனோஜ் ஆகியோர் டெல்லியில் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் முன்னிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கோடநாடு விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில் கோடநாடு வழக்கில் ஷயான், மனோஜ் ஆகிய 2 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஊட்டி கோர்ட்டில் அரசு வக்கீல் பாலநந்தகுமார் மனு தாக்கல் செய்தார்.

அதன்பின்னர் கோடநாடு வழக்கு கடந்த 8-ந் தேதி மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் மனோஜ்சாமி, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி ஆகிய 6 பேர் ஆஜரானார்கள். ஷயான், மனோஜ், திபு, பிஜின் ஆகிய 4 பேர் ஆஜராகவில்லை. அப்போது ஷயான், மனோஜ் ஆகிய 2 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கோர்ட்டில் ஆஜராகாத பிஜின், திபு மற்றும் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட ஷயான், மனோஜ் ஆகிய 4 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 4 பேரையும் கைது செய்ய கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் கேரளா, சென்னை உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று கேரளாவில் இருந்து கோவைக்கு காரில் வந்த திபு, பிஜின் ஆகியோரை க.க.சாவடி சோதனைச்சாவடியில் வைத்து, தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள ஷயான், மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story