குடிபோதையில் தகராறு, பீர் பாட்டிலால் குத்தி கல்லூரி மாணவர் படுகொலை


குடிபோதையில் தகராறு, பீர் பாட்டிலால் குத்தி கல்லூரி மாணவர் படுகொலை
x
தினத்தந்தி 10 Feb 2019 10:30 PM GMT (Updated: 10 Feb 2019 7:25 PM GMT)

கோவையில் குடிபோதையில் நடைபெற்ற தகராறில் கல்லூரி மாணவர் பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். விபத்து என நாடகமாடிய சிறுவன் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போத்தனூர்,

கோவை போத்தனூர் கணேசபுரம் விட்டல் நகரை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் விஷ்ணு (வயது 20). இவர், வாளையாரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் நண்பர்கள். இவர்கள் அடிக்கடி சந்தித்து ஒன்றாக மதுகுடிப்பது வழக்கம். அவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் இரவில் விட்டல்நகரில் உள்ள மைதானத்தில் அமர்ந்து மதுகுடித்து உள்ளனர். அப்போது விஷ்ணுவுக்கும், 17 வயது சிறுவனுக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் 2 பேரும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர்.

இதில், ஆத்திரம் அடைந்த 17 வயது சிறுவன், பீர்பாட்டிலை எடுத்து உடைத்து விஷ்ணுவின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த விஷ்ணு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே அவரை மற்ற 4 பேரும் சேர்ந்து மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது விபத்து ஏற்பட்டு காயம் அடைந்ததாக கூறி விஷ்ணுவை மருத்துவமனையில் சேர்த்தனர்.

விஷ்ணுவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து விஷ்ணுவை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கும், மோட்டார் சைக்கிள் விபத்தில் விஷ்ணு காயம் அடைந்ததாக கூறியுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஷ்ணு நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

விஷ்ணு இறந்தது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு மாணவரின் கழுத்து பகுதியில் பலமாக குத்தப்பட்ட காயம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விஷ்ணுவின் நண்பர்கள் 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். இதில், விஷ்ணுவை, 17 வயது சிறுவன் பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர்.

அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். லேத் ஒர்க்‌ஷாப்பில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தேன். நண்பர்களுடன் வாரம் ஒருமுறை அங்குள்ள மைதானத்தில் உட்கார்ந்து மது குடிப்போம். இந்த நிலையில் சம்பவத்தன்று மது குடித்தபோது போதையில் விஷ்ணுவை திட்டினேன். உடனே அவர் என்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு தாக்கினார். இதனால் எனக்கு கோபம் அதிகரித்தது.

உடனே நான் கீழே கிடந்த பீர்பாட்டிலை உடைத்து விஷ்ணுவின் கழுத்தில்குத்தினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். போலீசுக்கு பயந்து அவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்ததாக கூறி மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவர் இறந்துவிட்டார். ஆனால் விஷ்ணுவின் கழுத்தில் இருந்த காயத்தை வைத்து அவர் கொலை செய்யப்பட்டதை போலீசாரும், டாக்டர்களும் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து விசாரணை நடத்தி என்னை பிடித்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக விஷ்ணுவின் நண்பர்கள் மேலும் 3 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. கைதான சிறுவன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவரை சிறுவன் குத்தி கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story