குர்லா பணிமனையில் 4 பஸ்கள் தீயில் எரிந்து நாசம்


குர்லா பணிமனையில் 4 பஸ்கள் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 11 Feb 2019 3:30 AM IST (Updated: 11 Feb 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

குர்லாவில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 4 பஸ்கள் தீயில் எரிந்து நாசமாகின.

மும்பை, 

மும்பை குர்லா நேருநகர் பகுதியில் அரசு போக்குவரத்து கழக பஸ் பணிமனை உள்ளது. இங்கு வழக்கம்போல் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பஸ் ஒன்று நேற்று திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அருகில் நின்று கொண்டிருந்த மற்ற பஸ்களுக்கும் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு 4 வாகனங்களில் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தில் 4 பஸ்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து நேருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story