குன்னூர் ஏல மையத்தில், ரூ.9 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை
குன்னூர் ஏல மையத்தில் ரூ.9 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனையானது.
குன்னூர்,
குன்னூரில் தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஏல மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை விலைக்கு வாங்குகின்றனர். ஆனால் இந்த ஏலத்தில் தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குன்னூர் ஏல மையத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான 6-வது ஏலம் கடந்த 7, 8-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு மொத்தம் 11 லட்சத்து 88 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 7 லட்சத்து 9 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாகவும், 4 லட்சத்து 79 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 9 லட்சத்து 21 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 78 சதவீதம் ஆகும். இதன் ரொக்க மதிப்பு ரூ.9 கோடியே 17 லட்சம் ஆகும்.
சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.291 எனவும், ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.267 எனவும் இருந்தது.
சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.85 முதல் ரூ.90 வரையும், உயர் வகை தேயிலைத்தூள் ரூ.125 முதல் ரூ.135 வரையும் விற்பனையானது. டஸ்ட் ரக சாதாரண வகை தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.85 முதல் ரூ.89 வரையும், உயர் வகை தேயிலைத்தூள் ரூ.122 முதல் ரூ.138 வரையும் இருந்தது. விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தை விட 50 பைசா விலை உயர்வு இருந்தது. அடுத்த ஏலம் வருகிற 14, 15-ந் தேதிகளில் நடக்கிறது. அந்த ஏலத்துக்கு மொத்தம் 12 லட்சத்து 71 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.
Related Tags :
Next Story