சேலத்தில், தனியார் தோட்டம் வழியாக இறந்த பெண்ணின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல எதிர்ப்பு போலீஸ் குவிப்பு–பதற்றம்


சேலத்தில், தனியார் தோட்டம் வழியாக இறந்த பெண்ணின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல எதிர்ப்பு போலீஸ் குவிப்பு–பதற்றம்
x
தினத்தந்தி 11 Feb 2019 3:45 AM IST (Updated: 11 Feb 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தனியார் தோட்டம் வழியாக இறந்த பெண்ணின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

சூரமங்கலம், 

சேலம் அருகே சேலத்தாம்பட்டி பாவாயி வட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். வெள்ளி பட்டறை தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மஞ்சுளா நேற்று முன்தினம் திடீரென இறந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் துக்கம் விசாரிப்பதற்காக நேற்று காலை பாவாயி வட்டம் பகுதியில் உள்ள செல்வராஜ் வீட்டிற்கு வந்தனர்.

இதையடுத்து மதியம் இறந்த மஞ்சுளாவின் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. பின்னர், அவரது உடலை அப்பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டம் வழியாக மயானத்திற்கு கொண்டு செல்ல உறவினர்கள் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

ஆனால் அந்த தோட்டம் வழியாக இறந்தவரின் உடலை எடுத்து செல்லக்கூடாது என்றும், வேறு பாதை வழியாக மயானத்திற்கு எடுத்து செல்லுமாறும் கூறி அந்த நபர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சம்பந்தப்பட்ட நபருக்கும், செல்வராஜின் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் உதவி கமி‌ஷனர்கள் குணசேகரன், தினகரன், சேகர் மற்றும் சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, செல்வராஜ் மற்றும் அவரது உறவினர்கள் கூறும்போது, பாவாயி தோட்டம் பகுதியில் வசிக்கும் நபர்கள் யாராவது இறந்துவிட்டால் அவரது உடலை அங்குள்ள ஒரு தோட்டம் வழியாக மயானத்திற்கு கொண்டு செல்லது வழக்கம். ஆனால் தற்போது அந்த தோட்டம் தனியார் ஒருவருக்கு சொந்தமானது என்று ஒருவர் கூறி வருகிறார். ஆனால் தோட்டம் வழியாக செல்வதற்கு வழிப்பாதை இருக்கிறது. மேலும், இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் தற்போது அவர் வழிப்பாதை எதுவும் இல்லை என்று கூறுகிறார் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து தோட்டத்திற்கு சொந்தம் கொண்டாடும் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து போலீசார் விசாரித்தனர். அதற்கு அவர், தோட்டத்திற்கு உண்டான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும், தோட்டம் வழியாக நடைபாதை எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் திகைத்தனர். இதனிடையே, சேலம் மேற்கு தாசில்தார் தீபசித்ரா மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு வந்தனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினரிடமும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இரவு 9 மணி வரையிலும் சுமுகமான தீர்வு ஏற்படவில்லை. அதன்பிறகு தொடர்ந்து நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு இறந்துபோன மஞ்சுளாவின் உடலை இன்று (திங்கட்கிழமை) காலை சம்பந்தப்பட்ட தோட்டம் வழியாக மயானத்திற்கு எடுத்து செல்வது என்று முடிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story