கீழப்புலியூர் பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்


கீழப்புலியூர் பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 11 Feb 2019 4:00 AM IST (Updated: 11 Feb 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

கீழப்புலியூர் பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மங்களமேடு, 

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே கீழப்புலியூரில் பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. பச்சையம்மன் கோவில் மூலஸ்தான விமானம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகள் மற்றும் மலைமேல் உள்ள கம்பபெருமாள் கோவில் மூலஸ்தான விமானங்களின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி 8-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. 9-ந் தேதி 2 மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று 4-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து வாணவேடிக்கை, நாதஸ்வர இசையுடன் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் விநாயகர், கம்பபெருமாள் கோவில் மூலஸ்தான விமானத்திற்கு முதலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 9 மணிக்கு ஜெயச்சந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க பச்சையம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் கீழப்புலியூர் விவேகானந்தா மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் முருகேசன் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழாவில் பெரம்பலூர் அம்மன் ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குனர் முத்தையா, ஸ்ரீ முத்தையா பள்ளி தாளாளர் செந்தில்குமார், ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் ஸ்ரீ ராமன் ஆதித்யா, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட விவசாய அணி செயலாளரும், நித்தீஸ்வரர் ஏஜென்சி உரிமையாளருமான நடராஜன், ஆவினங்குடி பழனியாண்டவர் நவீன அரிசி ஆலை உரிமையாளர் ரமேஷ் மற்றும் வாலிகண்டபுரம், கீழப்புலியூர், தம்பை, தேவையூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் சன்னாசி, அறங்காவலர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story