‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: பேரூர் படித்துறையில் கிடந்த குப்பைகள் அகற்றம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பேரூர் படித்துறையில் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும் படித்துறையை தினசரி சுத்தம் செய்ய தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை,
புண்ணிய பூமி என்று அழைக்கப்படும் பேரூரில் பட்டீசுவரர் கோவில் உள்ளது. இங்கு அதிக எண் ணிக்கையில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம்செய்து செல்கிறார்கள். புராணத்தில் காஞ்சிமாநதி என்று அழைக்கப்பட்ட நொய்யல் ஆறு இந்த கோவில் அருகே செல்கிறது. இங்குள்ள படித்துறையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
ஆனால் படித்துறையில் உள்ள படிகள் உடைந்து தகர்ந்து காணப்படுகிறது. மேலும் அவை முறையாக சுத்தம் செய்யப்படாததால், அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் பிளாஸ்டிக் பொருட்கள், பழைய துணிகள் கிடந்தன. இதனால் ஆற்றில் இறங்க முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் பக்தர்கள் அவதிப்படுவது குறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பேரூர் படித்துறை பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கினார்கள். இதில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்கள் ஆலோசனை செய்து, படித்துறையை சுத்தம் செய்ய முடிவு செய்த னர். அதன்படி நேற்று காலை இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பேரூர் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அங்கு திரண்டனர். அதைத்தொடர்ந்து படித்துறையை சுத்தம் செய்யும் பணியை சமூக சேவகர் எஸ்.பி.அன்பரசன் தொடங்கி வைத்தார். இதையடுத்து தன்னார்வலர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் படித்துறையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றினர். மேலும் அவர்கள், பாசி படர்ந்து காணப்பட்ட படித்துறையை சுத்தம் செய்தனர்.
இது குறித்து பேரூர் படித்துறை பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
பேரூர் நொய்யல் படித்துறை 3 துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதாவது ஆறு பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலும், படித்துறை இந்து சமய அறநிலையத்துறையிடமும், இடம் பேரூர் பேரூராட்சியின் கீழ் உள்ளது. அந்த 3 துறைகளும் இணைந்து செயல்பட்டால்தான் நல்ல தீர்வு கிடைக்கும்.
அதற்கு தொடக்கமாக நாங்கள் இந்த பணியை செய்து உள்ளோம். தற்போது படித்துறையில் கிடந்த 2 டிராக்டர் குப்பைகளும், 500 மதுபாட்டில்களும் அகற்றப்பட்டு உள்ளன. பேரூர் படித்துறையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நொய்யல் ஆற்றில் உள்ள மண் மேடுகளை அகற்றும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் நடந்து வருகிறது.
இதுதவிர ஆற்றின் இருபுறத்திலும் உள்ள செடிகள், குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பணி 2 வாரத்துக்குள் முடிந்து விடும். அதுபோன்று உடைந்து கிடக்கும் படித்துறையை சரிசெய்ய அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அவரும் விரைவில் நிதி ஒதுக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் படித்துறையை தினசரி சுத்தம் செய்ய தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story