சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் 6 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு


சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் 6 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 10 Feb 2019 11:00 PM GMT (Updated: 10 Feb 2019 10:21 PM GMT)

சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பள்ளி மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தாராபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 6 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாராபுரம்,

திருப்பூர் முருங்கம்பாளையத்தை சேர்ந்த குபேந்திரன் என்பவரின் மகள் நவ்யா (வயது 15) இவர் தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ மகளிர் விடுதியில் தங்கி, அதே வளாகத்தில் உள்ள சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம் சாப்பிடுவதற்காக விடுதிக்கு சென்றார். அதன் பிறகு அவர் பள்ளிக்கு திரும்பவில்லை. விடுதியில் இருந்த கம்ப்யூட்டர் அறையில் நவ்யா துப்பட்டாவில் தூக்குப்போட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பிறகு அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது, அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நவ்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை பெற்றோர், உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் நவ்யாவின் சாவுக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்றும், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு நவ்யாவின் பெற்றோரும், உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரம்–கரூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதன் பிறகு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்று புறவழிச்சாலையில், உள்ள அமராவதி சிலை ரவுண்டானா பகுதியில் இருந்த 4 சாலைகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பிரதமர் மோடி திருப்பூருக்கு வந்திருந்ததால், இங்குள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் பலர் பாதுகாப்பிற்காக திருப்பூருக்கு சென்றுவிட்டனர். இதனால் போராட்டக்காரர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்த முடியாத நிலை இருந்தது. இந்த சாலை மறியல் சுமார் 4 மணி நேரம் நீடித்தது. இதனால் புறவழிச்சாலையில் மட்டுமல்ல நகர் பகுதிக்குள்ளும் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. புறவழிச்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அந்தந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

மதிய வேளையாக இருந்ததால் பயணிகள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சாப்பிடுவதற்கு வழியில்லாமல் தவித்தனர். தொலை தூரம் செல்லும் பயணிகள் வேறு வாகனத்தில் ஏறிச்செல்வதற்காக, பஸ்சிலிருந்து இறங்கி குழந்தைகளையும், பொருட்களை தூக்கிக் கொண்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மாற்று வாகனங்களில் ஏறிச்சென்றனர்.

இந்த நிலையில் மாலை 4.30 மணிக்கு உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் முறையாக சட்டரீதியான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, நவ்யாவின் உடலை பெற்றுக்கொண்டு ஊருக்குச் சென்றனர். தாராபுரத்தில் 2 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story