காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி
காவல்துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வாரவிழா கண்காட்சியை கலெக்டர் அன்புசெல்வன் திறந்து வைத்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அமைத்திருந்த சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் 20 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாவட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த படைப்புகளை பார்வைக்காக வைத்திருந்தனர்.
இதுபற்றி கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறுகையில், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சாலையை பயன்படுத்தும் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும். பொருளாதாரத்தில் மட்டும் உயர்ந்து விட்டால் போதாது ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். இளைஞர்கள் சாலையில் சாகசம் செய்யாமல் சாலை விதிகளை மதித்து விபத்தில்லா மாவட்டமாக ஆக்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பேசியதாவது:-
மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு இந்த கண்காட்சியை சிறப்பாக அமைத்துள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மனம் சஞ்சலமாக உள்ள போதும், சந்தோஷமாக உள்ள போதும் வாகனம் ஓட்டக்கூடாது. அற்புதமான பிறவி மனித பிறவி. கொலை குற்றம் என்பது படுபாதக செயல். ஆனால் அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ஆனால் எந்த ஒரு காரணமும் இன்றி விபத்தில் மரணம் அடைவது என்பது பெரிய இழப்பாகும். விபத்தினால் ஒருவர் மரணம் அடையும் போது அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே பாதிப்பு ஏற்படுகிறது.
சாலை விதிகளை கடைப் பிடிக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளாகிய நீங்கள் சொன்னால் உங்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டிப்பாக கேட்பார்கள். இதற்கு நீங்கள் முன் னுதாரணமாக இருக்க வேண்டும். உயிரின் மதிப்பு உங்களுக்கு தெரியவந்தால் சாலை விபத்தில் உயிரிழப்பு, தற்கொலை போன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர்(பொறுப்பு) முக்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு(ஆயுதப்படை) சரவணன், தர்மபுரி சமூக சேவகர் முரளி, கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story