மறவபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில், காளைகளை அடக்க முயன்ற 13 பேர் காயம்
தாடிக்கொம்புவை அடுத்த மறவபட்டியில் புனித பெரிய அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் காளைகளை அடக்க முயன்ற 13 பேர் காயம் அடைந்தனர்.
தாடிக்கொம்பு,
தாடிக்கொம்புவை அடுத்த மறவபட்டியில் புனித பெரிய அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் நவநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடந்த 7-ந் தேதி புனித பெரிய அந்தோணியாரின் உருவம் தாங்கிய கொடி ஏற்றம் நடைபெற்றது. நேற்று முன்தினம் பெரிய சப்பரபவனி நடைபெற்றது.
விழாவையொட்டி நேற்று காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா கொடியசைத்து ஜல்லிக்கட்டினை தொடங்கி வைத்தார். 364 ஜல்லிக்கட்டு காளைகள் கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டன. 336 வீரர்கள் தாடிக்கொம்பு அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் குழுக்களாக பிரித்து மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு மைதானத்திற்குள் களம் இறக்கி விடப்பட்டன.
அலங்காநல்லூர், பாலமேடு, திருச்சி, தவசிமடை, பஞ்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு காளைகள் இதில் கலந்து கொண்டன. நிகழ்ச்சி அறிவிப்பாளர் ஒலிபெருக்கியில் சில ஜல்லிக்கட்டு காளைகளின் பெயர்களை அறிவித்தவுடன் மாடுபிடி வீரர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு காளைகளை அடக்கினர். சில ஜல்லிக்கட்டு காளைகள் யாருடைய பிடிக் கும் சிக்காமல் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புபோன்று பாய்ந்து சென்றது.
ஜல்லிக்கட்டின்போது காளைகள் தங்களை பிடிக்க முயன்ற மாடுபிடி வீரர்களை கொம்புகளால் தூக்கி பந்தாடியது. ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க முயன்றதில் 13 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகளாக தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள், கட்டில்கள், பீரோக்கள், சைக்கிள் கள், எவர்சில்வர் அண்டா, குடம், பட்டுச்சேலைகள் போன்றவை வழங்கப்பட்டன.
இதில் இலங்கை கல்வி மந்திரி செந்தில் தொண்டைமான், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன், தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன், திண்டுக்கல் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெயசீலன், அகரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் அகரம் சக்திவேல், தாடிக்கொம்பு பேரூராட்சியின் முன்னாள் தலைவர் முத்துராஜ், தாடிக்கொம்பு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் முத்தையா, தாடிக்கொம்பு பேரூர் தி.மு.க. செயலாளர் நாகப்பன், அருணா சேம்பர் உரிமையாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜஸ்டின் பிரபாகரன், ஆனந்த்ராஜ் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு இருந்தனர். ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story