கடையம் அருகே குளிக்கச்சென்ற தொழிலாளி குவாரி தண்ணீரில் மூழ்கி சாவு


கடையம் அருகே குளிக்கச்சென்ற தொழிலாளி குவாரி தண்ணீரில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 11 Feb 2019 5:00 AM IST (Updated: 11 Feb 2019 5:00 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே தங்கை திருமணத்துக்கு சென்ற தொழிலாளி, குளிக்க சென்றபோது குவாரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடையம்,

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை சேர்ந்தவர் சரவணமுத்து. இவர் அங்கு தோட்ட தொழிலாளியாக உள்ளார். இவரது மகளுக்கு நேற்று கடையம் அருகே உள்ள வெள்ளிகுளத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து குடும்பத்தினருடன் சரவணமுத்து நேற்று முன்தினம் மாஞ்சோலையில் இருந்து கடையம் அருகே வடக்கு மடத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் வந்து தங்கியுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சரவணமுத்து மகன் நாகராஜன் (வயது 25). தேயிலை தோட்ட தொழிலாளி. இவர் உறவினர்களுடன் பண்டாரகுளத்திலிருந்து சொக்கநாதன்பட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நாகராஜன் கால் தவறி குவாரியில் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். உடன் சென்றவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து அம்பை தீயணைப்பு நிலையத்திற்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரவு வரை தேடியும் அவருடைய உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவர்கள் நேற்று காலை நிலைய அலுவலர் செல்லப்பாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக அவரது உடலை தேடி எடுத்தனர். பின்னர் அவரது உடலை பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான நாகராஜனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் நேற்று மாலையில் அவரது தங்கை திருமணம் திட்டமிட்டவாறு நடந்தது. 

Next Story