கோயம்பேட்டில் ஓடும் பஸ்சில் டிரைவர் மாரடைப்பால் மரணம் ஓரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்


கோயம்பேட்டில் ஓடும் பஸ்சில் டிரைவர் மாரடைப்பால் மரணம் ஓரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 12 Feb 2019 3:30 AM IST (Updated: 11 Feb 2019 9:53 PM IST)
t-max-icont-min-icon

கோயம்பேட்டில் ஓடும் பஸ்சில் டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்தார். முன்னதாக அவர் நெஞ்சு வலிப்பதாக கூறி சாலையோரம் பஸ்சை நிறுத்தி விட்டதால் அதில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.

பூந்தமல்லி, 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55). அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோயம்பேடு நோக்கி அரசு பஸ்சை ரமேஷ் ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை கோயம்பேடு நெற்குன்றம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறிவிட்டு ரமேஷ், பஸ்சை சாலை ஓரமாக நிறுத்தினார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கண்டக்டர் மற்றும் பயணிகள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே ரமேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், டிரைவர் ரமேஷ் உடலை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். டிரைவர் ரமேஷ், நெஞ்சு வலி ஏற்பட்ட உடன் பஸ்சை சாலையோரமாக நிறுத்தி விட்டதால் அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பஸ் வேகமாக செல்லும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். பயணிகளின் உயிரை காப்பாற்றிய டிரைவர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story