சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அமைச்சர் தங்கமணி பேச்சு


சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அமைச்சர் தங்கமணி பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2019 4:15 AM IST (Updated: 11 Feb 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் தங்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல், 

சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி மாணவ, மாணவிகள் இடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த போட்டிகளின் நோக்கம் ஆகும். சாலையில் யாராவது ஒருவர் செய்யும் தவறு மற்றவர்களையும் பாதிக்கும். சில சமயங்களில் உயிரிழப்பு கூட ஏற்படும்.

பள்ளி மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டு, தங்களின் பெற்றோருக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வருமுன் காப்பது தான் இந்த விழாவின் நோக்கம். சில நேரங்களில் வேகமாக செல்ல வேண்டும் என எண்ணி விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். எனவே மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் இடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து அவர் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறந்த அரசு பள்ளிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், இளமுருகன், முதன்மை கல்வி அதிகாரி உஷா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் நல்லிபாளையத்தில் நவீனமயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டிடத்தின் திறப்பு விழா மற்றும் புதிய வணிக வளாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மண்டல இணை பதிவாளர் பாலமுருகன் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். நாமக்கல் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு ரூ.13 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


அதன் பிறகு ரூ.22 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் விவசாய நகைக்கடன், பயிர்க்கடன் மற்றும் சிறு வணிகக்கடன் என 20 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார். முன்னதாக கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் கூட்டுறவுத்துறை கொடியை அமைச்சர் தங்கமணி ஏற்றி வைத்தார். மேலும் புதிய வணிக வளாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசினார்.

Next Story