சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் தீவிரம்


சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 11 Feb 2019 11:00 PM GMT (Updated: 11 Feb 2019 5:44 PM GMT)

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் மீண்டும் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சேலம், 

சேலம் மாநகரில் பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள். கோவிலின் உள்மண்டபம் பழுதடைந்த காரணத்தினால், தற்போது கோவில் முழுவதும் இடிக்கப்பட்டு ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் கோவில் எதிரே உள்ள மண்டபத்தில் உற்சவர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. சில பிரச்சினைகள் காரணமாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்தநிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்ட காரணத்தினால் மீண்டும் திருப்பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது:-

கோட்டை மாரியம்மன் கோவிலின் முன்மண்டபம், கருவறை ஆகியவை கருங்கற்களால் ஆன தூண்கள் மூலம் கட்டப்படுவதால் பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. குமாரபாளையத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த தூண்களில் அழகிய சிற்பக்கலை வரையும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக மட்டும் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகள் முடிந்தவுடன் கருவறை மற்றும் முன்மண்டபம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் காரணமாக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆடித்திருவிழா நடத்த முடிவு செய்து உள்ளோம். கட்டுமான பணிகளை இன்னும் 8 மாதத்திற்குள் முழுமையாக முடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவிலின் திருப்பணிகளை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story