குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Feb 2019 3:45 AM IST (Updated: 11 Feb 2019 11:27 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

விக்கிரவாண்டி தாலுகா மதுரப்பாக்கம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் 10 சிறிய அளவிலான குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் 10 சிறிய அளவிலான குடிநீர் தொட்டிகளில் மின் மோட்டார் பழுது காரணமாக கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை. மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறபோதிலும் பெரும்பாலானவர்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே மின் மோட்டார் பழுதை சரிசெய்து குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அந்த கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை காலிகுடங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதையறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலரை மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி முறையிட்டனர். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story