வீட்டுமனை பட்டா வழங்க கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


வீட்டுமனை பட்டா வழங்க கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Feb 2019 4:00 AM IST (Updated: 11 Feb 2019 11:40 PM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை பட்டா வழங்க கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

விருத்தாசலம், 

திட்டக்குடி அருகே உள்ள தர்ம குடிகாடு கிராமத்தை சேர்ந்த இந்து அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள், தங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்திருந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு கோஷம் எழுப்பினர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் சப்-கலெக்டர் பிரசாந்தை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

நாங்கள் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக தர்மகுடிகாடு பகுதியில் வசித்து வருகிறோம். இதில் 70 குடும்பங்களுக்கு இதுவரை இடமில்லாமல் குறுகிய இடத்தில் மிகவும் சிரமத்திற்கு இடையில் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 1984-ம் ஆண்டில் இருந்து சுமார் 45 குடும்பத்தினர் அரசு புறம்போக்கு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டி ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக திட்டக்குடி பேரூராட்சி சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 1997-ம் ஆண்டு வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு அந்த இடத்தினை எங்கள் குடும்பங்களுக்கு வழங்கலாம் என உறுதி அளித்தனர். ஆனால் தனி நபர் ஒருவர் அந்த இடம் தனக்கு சொந்தமான இடம் எனக் கூறி வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில் அந்த இடம் அரசு புறம்போக்கு இடம்.எனவே அந்த இடத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த புறம்போக்கு இடங்களை தற்போது தனி நபர்கள் சிலர் அரசு ஊழியர்களின் அனுமதியோடு பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு வேறு இடம் இல்லாததால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி இலவச மனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பிரசாந்த் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story