வெங்கல் அருகே குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்ட எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கல் அருகே உள்ள பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் சுமார் 20 ஏக்கரில் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை பல ஆண்டு காலமாக சுமார் 2500 பேர் பயன்படுத்தி வந்தனர்.
ஏற்கனவே இந்த புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு பட்டா போட்டு தர வேண்டும் என்று பொதுமக்கள் கூறிவந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இந்த பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை அதிகாரிகள் நேற்று தொடங்கினர்.
இதனையடுத்து, பணிகள் நடைபெறும் தகவலை அறிந்ததும், தமிழ்நாடு விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் விவசாய சங்க மாவட்டத் தலைவர் ரவி தலைமையில் திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் பூச்சி அத்திப்பேடு பஸ் நிறுத்தம் அருகே நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரகாசன் தலைமையில் வந்திருந்த போலீசார் 120 பெண்கள் உள்பட 200 பேரை கைது செய்தனர். அவர்களை வாணியன் சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை தாசில்தார் லதா போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்கள் தங்களுக்கு மேற்கண்ட பகுதியில் பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால், பூச்சி அத்திப்பேடு பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
Related Tags :
Next Story