‘தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எழுச்சி பெற செய்வதே முதல் பணி’ கே.எஸ்.அழகிரி பேட்டி


‘தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எழுச்சி பெற செய்வதே முதல் பணி’ கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 11 Feb 2019 11:00 PM GMT (Updated: 11 Feb 2019 7:16 PM GMT)

‘தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எழுச்சி பெற செய்வதே முதல் பணி‘ என்று மயிலாடுதுறையில், கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

மயிலாடுதுறை, 

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கோவையில் இருந்து ரெயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்தார். அப்போது கட்சியின் நாகை வடக்கு மாவட்ட தலைவர் ராஜகுமார் தலைமையில் நகர தலைவர் ராமானுஜம் மற்றும் அவரது ஆதரவாளர்களும், கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் முன்னாள் நகர தலைவர் செல்வம் மற்றும் ஆதரவாளர்களும் ரெயில் நிலையத்திற்கு வந்து கே.எஸ்.அழகிரிக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கட்சியை வழிநடத்தி செல்ல எனக்கு வாய்ப்பு அளித்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எழுச்சி பெற செய்வதே எனது முதல் பணியாகும். மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, தி.மு.க. தலைமையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய பாடுபட வேண்டும். அப்படி செய்தால்தான் ராகுல்காந்தியை பிரதமராக ஆட்சியில் அமர்த்த முடியும். அப்போது தான் இந்திய இறையாண்மையையும், சமூக நீதியையும் ஏற்று கொண்ட நாடாக இந்தியா திகழும்.

இந்தியாவை தொழில்வளம் மிக்க நாடாக மாற்றியமைக்கும் சிறப்பான திட்டங்களுடன் ராகுல்காந்தி மக்களை சந்தித்து வருகிறார். திருப்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, கடன் தள்ளுபடி செய்வது விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வாகாது என்று கூறினார். அப்படியென்றால் விவசாய கடனை தள்ளுபடி செய்வதை தவிர வேறு ஏதேனும் மாற்றுத்திட்டங்கள் பா.ஜனதாவிடம் உள்ளதா? கமல்ஹாசன் தி.மு.க.விற்கு எதிராக கருத்துக்களை கூறி இருப்பதன் மூலம் அவரது கருத்து மதசார்பின்மைக்கு எதிராக மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து கே.எஸ்.அழகிரி, மயிலாடுதுறை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மாவட்ட தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Next Story