ஆம்பூர் அருகே சாராயம் விற்ற தந்தை-மகளை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்


ஆம்பூர் அருகே சாராயம் விற்ற தந்தை-மகளை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்
x
தினத்தந்தி 12 Feb 2019 3:15 AM IST (Updated: 12 Feb 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே சாராயம் விற்ற தந்தை- மகளை மலைக்கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

ஆம்பூர், 

ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் யாரும் சாராயம் விற்கமாட்டோம் என சில நாட்களுக்கு முன்பு போலீசாரிடம் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த குழந்தை (வயது 56) மற்றும் அவரது மகள் சரோஜா (30) ஆகிய 2 பேரும் சாராயம் விற்பனை செய்து வந்தனர். இதனால் மலைக்கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் போலீசார் அவர்களை கைது செய்ய எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலையில் 4 டியூப்களில் சாராயம் வாங்கி வந்து பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் குழந்தையும், சரோஜாவும் சாராய விற்பனையை ஆரம்பித்தனர். இதனால் ஆவேசம் அடைந்த மலைக்கிராம மக்கள் 2 பேரையும் பிடித்து ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் பிடித்து வாணியம்பாடி மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story