குடியாத்தம் அருகே வாழை, பப்பாளி தோட்டங்களை சேதப்படுத்திய 7 காட்டு யானைகள்


குடியாத்தம் அருகே வாழை, பப்பாளி தோட்டங்களை சேதப்படுத்திய 7 காட்டு யானைகள்
x
தினத்தந்தி 12 Feb 2019 3:00 AM IST (Updated: 12 Feb 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே வாழை, பப்பாளி தோட்டங்களை 7 யானைகள் கொண்ட கூட்டம் சேதப்படுத்தின.

குடியாத்தம்,

குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டபல்லி உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள நிலங்களில் அடிக்கடி காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் இப்பகுதியை ஒட்டியபடி ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் கவுண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது. அங்கிருந்தும் யானைகள் தமிழக எல்லைக்குள் வந்து கிராமப்புற பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துகிறது.

கடந்த 3 மாதங்களாக காட்டு யானைகள் தினமும் வாழை, மா, பப்பாளி, தக்காளி மற்றும் நெற்பயிர்களை நாசம் செய்து வருகிறது. வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து விரட்டி வருகின்றனர். இருப்பினும் யானைகள் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கொட்டமிட்டா கிராமம் அம்பேத்கர் நகர் பின்பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள வனப்பகுதியில் 7 யானைகள் கூட்டம் பிளிறியபடி இருந்தது. இரவு முழுவதும் மின்தடை இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் இரவை கழித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனவர் ரவி, வனக்காப்பாளர்கள் பூபதி, வெங்கடேசன், சிவா உள்ளிட்ட வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து யானைகள் கூட்டத்தை விரட்டினர். மேலும் யானைகள் கூட்டம் தனகொண்டபல்லி அருகே சங்கர் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்து 60 வாழை மரங்களையும், 50 பப்பாளி மரங்களையும், தக்காளி செடிகளையும் நாசம் செய்தது. அருகில் இருந்த டில்லிபாபு என்வரது நிலத்தில் இருந்த 220 செவ்வாழை மரங்களை நாசம் செய்தது. தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டினர்.

சேதம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் காந்தி மற்றும் வனத்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story