கஜா புயலால் பாதிப்பு: நிவாரண தொகை வழங்க வேண்டும் அதிகாரிகளிடம் கிராம மக்கள் வலியுறுத்தல்


கஜா புயலால் பாதிப்பு: நிவாரண தொகை வழங்க வேண்டும் அதிகாரிகளிடம் கிராம மக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Feb 2019 4:30 AM IST (Updated: 12 Feb 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர், 

கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், திருச்சிற்றம்பலம், ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்தன. கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி சேதம் குறித்து கணக்கெடுக்கப்பட்டு நிவாரண தொகை, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள், மகளிர் குழுவினர் சுயதொழில் தொடங்கவும், பயிர் சாகுபடி செய்யவும் என பல்வேறு தேவைகளுக்காக கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த காலஅவகாசம் அளிக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் சேண்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், மலையர்நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) செல்வி, துணை கலெக்டர் பாலசந்திரன் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், கஜா புயல் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் எங்களுக்கு நிவாரண தொகையும், நிவாரண பொருட்களும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து பெண்கள் சிலர் கூறும்போது, நாங்கள் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசித்து வருகிறோம். கஜா புயலால் நாங்களும் பாதிக்கப்பட்டோம். எங்களது வாழ்வாதாரத்தையும் இழந்தோம். ஆனால் எங்கள் பகுதிக்கு அதிகாரிகள் யாரும் வந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளவில்லை. இதனால் நிவாரண தொகையும், நிவாரண பொருட்களும் இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே முறையாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த மலையர்நத்தம் கிராமமக்கள், கூட்ட அறைக்கு செல்லும் வழியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட போவதாக தகவல் பரவியது. இதை அறிந்த போலீசார் அங்கு சென்று கிராம மக்களை வெளியேற்றினர்.

Next Story