சந்தவாசல் அருகே மோட்டார்சைக்கிள் மரத்தில் மோதி 2 பேர் பலி - ஒருவர் படுகாயம் பள்ளி மாணவர்கள் ‘லிப்ட்’ கேட்டு ஏறிச்சென்றபோது விபரீதம்


சந்தவாசல் அருகே மோட்டார்சைக்கிள் மரத்தில் மோதி 2 பேர் பலி - ஒருவர் படுகாயம் பள்ளி மாணவர்கள் ‘லிப்ட்’ கேட்டு ஏறிச்சென்றபோது விபரீதம்
x
தினத்தந்தி 12 Feb 2019 4:00 AM IST (Updated: 12 Feb 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

சந்தவாசல் அருகே பள்ளி மாணவர்கள் லிப்ட் கேட்டு ஏறிச்சென்றபோது மோட்டார்சைக்கிள் மரத்தில் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கண்ணமங்கலம்,

சந்தவாசல் அருகே ரெட்டைதார் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன்கள் வெற்றிவேல் (வயது 17), யுவராஜ் (14). வெற்றிவேல் பிளஸ் 2-ம், யுவராஜ் 9-ம்வகுப்பும் சந்தவாசல் பள்ளியில் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று காலை பள்ளிக்கு சென்றனர்.

பள்ளிக்கு செல்லும் வழியில் சந்தவாசல் அருந்ததிபாளையத்தை சேர்ந்த பரத் (18) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு இருவரும் பின்னால் அமர்ந்து சென்றனர்.

அப்போது பரத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளியமரத்தின் மீது மோதியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ், பரத் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். வெற்றிவேலுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த 9-ந் தேதி நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் புளியமரத்தில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story