கோவை கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் மோட்டார்சைக்கிள் பறிப்பு


கோவை கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் மோட்டார்சைக்கிள் பறிப்பு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:15 PM GMT (Updated: 11 Feb 2019 7:45 PM GMT)

சித்தோடு அருகே கத்தி முனையில் கோவை கல்லூரி மாணவர்களிடம் மோட்டார்சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பவானி, 

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் கார்த்திக் (வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கார்த்திக்கும், அதே கல்லூரியில் படிக்கும் அவருடைய நண்பருமான ஹரிகிருஷ்ணன் (18) என்பவரும் சொந்த வேலை விஷயமாக கோவையில் இருந்து மோட்டார்சைக்கிளில் சேலம் மாவட்டம் ஏற்காடு நோக்கி நேற்று முன்தினம் அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சமத்துவபுரம் மேடு பகுதியில் வந்தபோது இயற்கை உபாதையை கழிக்க 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கினர். பின்னர் ரோட்டோரம் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு சிறிது தூரம் நடந்து சென்று இயற்கை உபாதையை கழித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென கார்த்திக், ஹரிகிருஷ்ணன் ஆகியோரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிளின் சாவியை பறித்தனர்.

பின்னர் அந்த 2 பேரும் மோட்டார்சைக்கிளை திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

ஏற்கனவே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நசியனூர் அருகே ரோட்டில் நடந்து வந்த ஒருவரிடம் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். உடனே அவர் ‘திருடன் திருடன்’ என சத்தம் போட்டு கத்தினார். அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக், அந்த 2 பேரையும் பிடித்தார். ஆனால் அந்த 2 பேரும் அவரிடம் இருந்து தப்பி ஓடினர். உடனே பொதுமக்கள் உதவியுடன் ஓடிச்சென்று சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் அவர்களை பிடித்து கைது செய்தார். இதுபோன்று வழிப்பறி சம்பவங்கள் நசியனூர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story