லால்குடி அருகே தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு 3 பேருக்கு வலைவீச்சு
லால்குடி அருகே தாய், மகனை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லால்குடி,
லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் புதுத்தெருவை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன்கள் ராஜீவ்காந்தி(வயது 38), சிவகுமார்(36), இந்தியராஜ்(30). இதில் ராஜீவ்காந்தி வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன். இவருடைய மனைவி தமிழரசி(55), மகன் தினேஷ்(29). பெரியண்ணன் வீட்டின் அருகே ராஜீவ்காந்தி, அவருடைய சங்கத்தின் கொடிக்கம்பத்தை நட்டு வைத்துள்ளார். இது தொடர்பாக ராஜீவ்காந்திக்கும், தினேசுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லால்குடியில் நடந்த ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் நன்னிமங்கலம் பகுதியில் சுற்றி திரிந்தன. அந்த காளைகளை அதன் உரிமையாளர்கள் பிடித்து கொடிக்கம்பத்தில் கட்டி வைத்து, பின்னர் மூக்கணாங்கயிறு போட்டு அழைத்து சென்றனர். இதில் கொடிக்கம்பம் முறிந்தது.
அரிவாள் வெட்டு
இதனால் ஆத்திரமடைந்த ராஜீவ்காந்தி, சிவகுமார், இந்தியராஜ் ஆகியோர் பெரியண்ணன் வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தைகளால் திட்டினர். இதை தட்டிக்கேட்ட தமிழரசியை, சிவகுமார் அரிவாளால் வெட்டியதாகவும், அதை தடுக்க முயன்ற தினேசை ராஜீவ்காந்தி அரிவாளால் வெட்டியதாகவும், இருவரையும் இந்தியராஜ் கட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து 3 பேரும் தப்பிச்சென்றனர். இதில் காயமடைந்த தினேஷ், தமிழரசி ஆகியோர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே தினேஷ், தமிழரசி ஆகியோர் சேர்ந்து தெருவில் நின்று கொண்டிருந்த ராமரை தாக்கி, அவருடைய வீட்டை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராமர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் ராஜீவ்காந்தி, சிவகுமார், இந்தியராஜ் ஆகியோர் மீது லால்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார். இதேபோல் ராமர் கொடுத்த புகாரின் பேரில் தினேஷ், தமிழரசி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story