பெரம்பலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வீட்டுமனை கேட்டு அரும்பாவூர் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


பெரம்பலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வீட்டுமனை கேட்டு அரும்பாவூர் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 12 Feb 2019 4:30 AM IST (Updated: 12 Feb 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை கேட்டு அரும்பாவூர் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார் கூட்டத்தில் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்த மனுவில், அரும்பாவூர் பேரூராட்சியில் ஆதிதிராவிட இனமக்களாகிய நாங்கள் அதிகமாக வசித்து வருகிறோம். ஏழ்மையின் காரணமாக நாங்கள் ஒரு குடிசை வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருவதால் இரவு நேரத்தில் தூங்குவதற்கு இடமின்மையால், தெருக்களில் தூங்க வேண்டிய அவல நிலையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதனால் பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்கினால் அதில், குடிசை போட்டு வாழலாம் என்ற நோக்கில் கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடமும், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரியிடமும் இருமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் அரும்பாவூரில் அரசுக்கு சொந்தமான ஏதாவது புன்செய் நிலத்தை கையகப்படுத்தி, வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். இனியும் மாவட்ட நிர்வாகம் வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியிருந்தனர்.

வேப்பந்தட்டை தாலுகா எறையூர் நரிக்குறவர் காலனி தெருவில் வசிக்கும் மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் காலனியில் 120 நரிக்குறவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்வதற்கு அதே பகுதியில் அரசு சார்பில் தலா 3 ஏக்கர் நிலம் எங்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கான பட்டா வழங்கப்படவில்லை. இதில் நாங்கள் தற்போதும் விவசாயம் செய்து வருகிறோம். எனவே அந்த நிலத்திற்கான பட்டாவை எங்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

குன்னம் அண்ணா நகரை சேர்ந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ஆரோக்கியநாதன்(வயது 42) கொடுத்த மனுவில், பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் குன்னம் பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இதேபோல் குன்னம் பஸ் நிலையத்தின் எக்ஸ் ரோடு பிரிவிலும் சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் உள்னன. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ- மாணவிகளும், பொதுமக்கள், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அந்தப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

மேலும் பொதுமக்கள் சார்பில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 227 மனுக்களை கலெக்டர் சாந்தாவிடம் கொடுக்கப்பட்டது. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் காய்கறி, தள்ளுவண்டி பழ வியாபாரங்கள், பால்மாடு மற்றும் ஆடு வளர்த்தல் உள்ளிட்ட சுயதொழில் தொடங்குவதற்காக 10 திருநங்கைகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் சாந்தா வழங்கினார். 

Next Story