அழகிகள் இருப்பதாக கூறி அழைத்து சென்று என்ஜினீயரிடம் பணம் பறித்த 2 பேர் கைது


அழகிகள் இருப்பதாக கூறி அழைத்து சென்று என்ஜினீயரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2019 10:45 PM GMT (Updated: 11 Feb 2019 8:32 PM GMT)

கோவையில் அழகிகள் இருப்பதாக கூறி அழைத்து சென்று என்ஜினீயரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிங்காநல்லூர்,

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த 25 வயது என்ஜினீயர் கோவை வந்தார். அவர் விமான நிலையம் பின்புறம் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனி நோக்கி நடந்து சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த 2 பேர் எங்களிடம் வெளிமாநில அழகிகள் உள்ளனர். குறைந்த பணம் கொடுத்தால் அவர்களிடம் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று கூறினார்கள்.

மேலும் அங்கு சுடிதார் அணிந்து நின்ற 2 அழகிகளை காட்டினர். அதற்கு ஒத்துக்கொண்டதால் என்ஜினீயரை, மோட்டார் சைக்கிளில் அமர வைத்து 2 பேரும் அழைத்து சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து சுடிதார் அணிந்து இருந்த 2 பேரும் ஸ்கூட்டரில் சென்றனர்.

எஸ்.ஐ.எச்.எஸ். காலனி அருகே சென்றதும், என்ஜினீயரை அழைத்துச்சென்றவர்களும், பின்னால் ஸ்கூட்டரில் வந்தவர்களும் திடீரென்று நின்றனர். அப்போது ஸ்கூட்டரில் வந்தது அழகிகள் இல்லை என்பதும், திருநங்கைகள் என்பதும் என்ஜினீயருக்கு தெரியவந்தது. இதனால் அவர், அவர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

உடனே அவர்கள் 4 பேரும் சேர்ந்து, என்ஜினீயரின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கொடுக்கும்படி மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டனர். அப்போது அந்த வழியாக சிங்காநல்லூர் போலீசார் ரோந்து வந்தனர். அவர்களிடம் என்ஜினீயர் நடந்த சம்பவம் பற்றி விவரமாக கூறினார்.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள், சிங்காநல்லூரை சேர்ந்த அசோக் (வயது 23), அப்பாஸ் (19) என்பதும், திருநங்கைகள் 2 பேரும் சேலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அசோக், அப்பாஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. திருநங்கைகள் 2 பேரையும் போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். அழகிகள் இருப்பதாக கூறி அழைத்து சென்று என்ஜினீயரிடம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story