கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு எழுதி கொடுக்கும் கட்டிடம் பூட்டி கிடக்கும் அவலம்
புதுக்கோட்டையில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் பூட்டிகிடக்கும் மனு எழுதி கொடுக்கும் கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுக்க வந்து செல்கின்றனர். இதனால் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இவ்வாறு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் எழுத படிக்க தெரியாதவர்கள் என்பதால், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் மனு எழுதி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கு பணியாளர்கள் அமர்ந்து, ஒவ்வொரு திங்கட்கிழமையும் மனு கொடுக்க வருபவர்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது பல மாதங்களாக இந்த மனு எழுதி கொடுக்கும் கட்டிடம் பூட்டியே கிடக்கிறது.
இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள், கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலுக்கு வெளியே சாலை ஓரத்தில் அமர்ந்து மனு எழுதி கொடுப்பவர்களிடம் ரூ.10 முதல் ரூ.70 வரை கொடுத்து மனு எழுதி வாங்கி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து வருகின்றனர். மேலும் சிலர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு எழுதி கொடுப்பாளர்கள் என கூறி உள்ளே வந்து விடுகின்றனர். மனு எழுதி கொடுக்கும் கட்டிடம் பூட்டி கிடப்பதை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே சென்று மனு எழுதி வாங்கி வந்து மனு கொடுத்து செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.
தற்போது குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு அதிக அளவில் மக்கள் மனு கொடுக்க வருவதால், மனு எழுதி கொடுப்பவர்கள் ரூ.50 முதல் ரூ.150 வரை மனு எழுதி கொடுக்க பணம் வாங்குகின்றனர். மேலும் சிலர் உங்கள் மனுவை எங்களிடம் கொடுத்தால், நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்தித்து மனுவை கொடுத்து நடவடிக்கை எடுக்க செய்வோம் எனக்கூறி ரூ.200 முதல் ரூ.500 வரை வசூல் செய்து வருகின்றனர். எனவே இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பூட்டி கிடக்கும் மனு எழுதி கொடுக்கும் கட்டிடத்தை திறந்து, ஒவ்வொரு திங்கட்கிழமையும் பணியாளர்களை அமர்த்தி மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story