மயானத்திற்கு தனியார் நிலம் வழியாக பாதை அமைக்க எதிர்ப்பு: பொக்லைன் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்திய 4 பெண்கள் கைது சேலம் அருகே பரபரப்பு
சேலம் அருகே மயானத்திற்கு தனியார் நிலம் வழியாக பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்திய 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்,
சேலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி பாவாயி வட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சுளா(வயது 35) உடல்நலக்குறைவால் கடந்த 9-ந்தேதி இறந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டம் வழியாக மயானத்திற்கு எடுத்து செல்ல உறவினர்கள் ஏற்பாடுகள் செய்தனர்.
ஆனால் இதற்கு அந்த தோட்டத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவருக்கும், செல்வராஜ் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று இருதரப்பினரிடமும் கடந்த 10-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மஞ்சுளாவின் உடலை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த பாதையை பொதுவழித்தடமாக ஒதுக்கி தரவேண்டும் என்று கூறி பெண்ணின் உடலை எடுக்காமல் விடிய, விடிய போராட்டம் நடத்தினர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனிடையே செல்வராஜின் உறவினர்கள் நேற்று காலை கலெக்டர் ரோகிணியை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், பொது வழித்தடம் இல்லாததால் பெண்ணின் உடலை அடக்கம் செய்ய முடியவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று மாலை உதவி கலெக்டர் செழியன், மேற்கு தாசில்தார் தீபசித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிசந்திரன், சுந்தரராஜன் மற்றும் போலீசார் மீண்டும் அங்கு இருதரப்பை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடலை எடுத்து செல்வதற்காக 4 அடி பாதை மட்டும் ஒதுக்க அதிகாரிகள் முன்வந்தனர். அதைத்தொடர்ந்து அந்த பாதையில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது. ஆனால் பெண்ணின் உடலை எடுத்து செல்வதற்கு வழித்தடம் ஒதுக்க முடியாது என்று கூறி 4 பெண்கள் பொக்லைன் எந்திரம் முன்பு அமர்ந்து திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் அங்கிருந்து அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தினர். மேலும் இதுதொடர்பாக ராமாயி(40), தங்கம்மாள்(70), அஞ்சலம்(45), கண்மணி(33) ஆகிய 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அந்த வழிப்பாதையை சீரமைக்கும் பணி நடந்தது. பின்னர் மஞ்சுளாவின் உடல் அந்த பாதை வழியாக மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story