திருச்செந்தூரில் மாசித்திருவிழா: சுவாமி-அம்பாள் வீதி உலா


திருச்செந்தூரில் மாசித்திருவிழா: சுவாமி-அம்பாள் வீதி உலா
x
தினத்தந்தி 11 Feb 2019 9:45 PM GMT (Updated: 11 Feb 2019 9:06 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில், சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி, தூண்டிகை விநாயகர் கோவிலுக்கு பின்புறம் உள்ள ஆழ்வார்திருநகரி தாசில் ஆண்டியப்ப பிள்ளை மண்டபத்திற்கு வந்தனர். பின்னர் அம்பாள் மட்டும் உள்மாட வீதி, வெளி ரத வீதிகளில் உலா வந்து, மீண்டும் மண்டபத்தை சேர்ந்தார்.

பின்னர் மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி, பரிவார மூர்த்திகளுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து, சிவன் கோவிலை சேர்ந்தனர்.

3-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துகிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

Next Story