சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்- வாலிபர் பலி


சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்- வாலிபர் பலி
x
தினத்தந்தி 12 Feb 2019 3:15 AM IST (Updated: 12 Feb 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில், தனது தந்தையுடன் சென்று பெண் பார்த்துவிட்டு வீடு திரும்பிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிதம்பரம்,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஆலங்குடியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவருடைய மகன் சிவசக்திவேலன்(வயது 32). இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக பெண் தேடும் படலம் நடந்து வந்தது. இதில் கடலூரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை தேர்வு செய்தனர்.

இந்த பெண்ணை பார்ப்பதற்காக மாசிலாமணியும், சிவசக்திவேலனும் மோட்டார் சைக்கிளில் நேற்று காலையில் கடலூருக்கு வந்தனர். அங்கு பெண் பார்த்துவிட்டு, மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர்.

சிதம்பரத்தில், புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சிவசக்திவேலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த மாசிலாமணி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் தனியார் பஸ் டிரைவரான நல்லாத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story