பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் நாங்கள் தனித்து போட்டியிட தயாராக உள்ளோம் திருப்பூரில் சீமான் பேட்டி
பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் நாங்கள் தனித்து போட்டியிட தயாராக உள்ளோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திருப்பூர்,
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காமராஜரை பற்றி பேசியுள்ளார். காமராஜர் ஆட்சி என்பது அறம் சார்ந்த ஆட்சி. பா.ஜனதா கட்சி, காமராஜரின் ஆட்சியை தான் நடத்துகிறதா?. நல்லாட்சி தருகிறோம் என்று கூற அவர்களால் முடியவில்லையே. பிரதமர் மோடி, தமிழ் மக்களிடம் உற்சாகமாக பேசி வாக்கு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழில் பேசுவதும், திருக்குறளை சொல்லுவதும், மக்களால் நேசிக்கப்படும் தலைவர்களின் பெயர்களை கூறுவதும் இயல்புதான். பா.ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் ஒருவருக்கொருவர் மாறி, மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டே தான் இருக்கிறார்கள். இதுவரை ரபேல் போர்விமானங்கள் வாங்கியதில் வெளிப்படையான விவாதத்திற்கு பா.ஜனதா தயாராக இல்லை.
காடுகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளதால் அங்கிருந்து குடியிருப்புகளில் யானைகள் புகுந்து கொள்கிறது. இது முழுக்க முழுக்க நமது தவறு மட்டுமே. இதுதான் தற்போது சின்னத்தம்பி யானையின் நிலையாக உள்ளது. இதில் என்ன தவறு உள்ளது. இந்தியாவில் மிக எளிமையான பெண்ணாக மம்தாவை பார்க்கிறோம். பா.ஜனதா அரசு அவர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியுள்ளதால் அவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கிறது. கடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சியினர் தேர்தலில் வாக்கு எண்ணும் எந்திரத்தில் குளறுபடிகளை ஏற்படுத்தி தான் வெற்றி பெற்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கிறது.
இதற்கான விவாதத்தை அவர்கள் நடத்த தயாராக இல்லை. ஆனால் தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களில் குளறுபடி ஏற்படுத்தும் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிதிநிலை அறிக்கைகள் தேர்தலை அடிப்படையை வைத்தே கவர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளது. இது அனைத்தும் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகள். நாங்கள் தனித்து போட்டியிட தயாராக உள்ளோம். திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி என்பது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.