கண்காணிப்பு கேமரா பொருத்தி வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க இயலுமா? கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


கண்காணிப்பு கேமரா பொருத்தி வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க இயலுமா? கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Feb 2019 11:01 PM GMT (Updated: 11 Feb 2019 11:01 PM GMT)

கண்காணிப்பு கேமரா பொருத்தி வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க இயலுமா என்பது குறித்து மதுரை கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

வைகை ஆற்றில் 452–க்கும் அதிகமான இடங்களில் கழிவு நீர் கலக்கிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கப்பட்டு உள்ளதால், ஆறு மிகவும் குறுகி காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆற்றுப்பகுதியை ஆக்கிரமித்து பல்வேறு கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

வைகை ஆற்றை தூய்மைப்படுத்தி பாதுகாக்கவும், மாசுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சமீப காலமாக வைகை ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதுடன் அதிகஅளவில் குப்பைகளும், கழிவுநீரும் கலக்கின்றன. இந்தநிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மதுரை வைகை ஆற்றுப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், காலப்போக்கில் வைகை ஆறு அகலம் சுருங்கி, அதன் வழித்தடம் மறைந்துவிடும். எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றில் சாலை அமைக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது குறித்து, இங்குள்ள மக்களுக்கு கவலையே இல்லை. பின்னர் எப்படி இந்த வி‌ஷயத்தில் மற்றவர்களுக்கு அக்கறை இருக்கும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், வைகை ஆற்றில் எத்தனை இடங்களில் கழிவுநீர்கலக்கிறது, குப்பைகள் கொட்டப்படுகிறது. இதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன, இந்த ஆற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளதா, கழிவுநீர் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதை கண்காணிக்க கேமரா பொருத்த முடியுமா, கேமரா பொருத்துவதாலும், கூடுதல் அபராதம் விதிப்பதாலும் ஆற்றில் குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீர் கலக்கப்படுவதையும் தடுக்க முடியுமா, ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து மதுரை கலெக்டர், மாநகராட்சி ஆணையர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 18–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story