கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 12 Feb 2019 5:00 AM IST (Updated: 12 Feb 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

இந்த நிலையில் 2 குழந்தைகளுடன் வந்திருந்த பெண் ஒருவர், பையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தன் மீது ஊற்றினார். பின்னர் தனது குழந்தைகள் மீதும் ஊற்ற முயற்சித்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் இருந்து பாட்டிலை பறித்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவர் சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பது தெரியவந்தது.

அவரது கணவர் அருள்முருகன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே பஞ்சவர்ணம் தனது குழந்தைகள் முத்துதாஸ் (வயது12), கருப்பசாமி (9) ஆகியோருடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

ஆனால் வீட்டில் இருந்து வெளியேறும்படி சகோதரர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்களாம். இது குறித்து பஞ்சவர்ணம் போலீசில் புகார் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விரக்தி அடைந்த பஞ்சவர்ணம், குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story