மராட்டியத்தில் 43 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவதா? பா.ஜனதா மீது சிவசேனா சாடல்


மராட்டியத்தில் 43 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவதா? பா.ஜனதா மீது சிவசேனா சாடல்
x
தினத்தந்தி 12 Feb 2019 3:00 AM IST (Updated: 12 Feb 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 43 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெறுவோம் என கூறிய பா.ஜனதாவை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.

மும்பை, 

புனேயில் சமீபத்தில் நடந்த பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 42 இடங்களை கைப்பற்றியது. இந்த முறை 43 இடங்களை கைப்பற்றும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தநிலையில் இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

பால் மற்றும் விவசாய விளைபொருளுக்கு தகுந்த விலை கோரி அகமத்நகர் பகுதியில் விவசாயிகளின் மகள்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தை பா.ஜனதா அரசு நசுக்க பார்க்கிறது. காலியாக உள்ள 24 ஆயிரம் பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அரசு நடத்தும் தங்கும் விடுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் 1,000 குழந்தைகள் இறந்துள்ளனர். அரசிடம் இந்த பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் இல்லை. ஆனால் மராட்டியத்தில் 43 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவிக்கிறது.

மக்களின் பிரச்சினைகளை விட அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அதிக குளிரின் தாக்கத்தால் பனித்துளிகள் உறைபனியாக மாறிவிடும். சில ஆட்சியாளர்களின் மூளையும் அதேபோல் உறைந்துபோய்விட்டது.

இந்த மக்கள் பிரச்சினைகள் தான், இரு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலில் இணையும் முடிவில் தீவைத்தது. ஆனால் இந்த நிலைமையை நாங்கள் உருவாக்கவில்லை. பா.ஜனதா அத்தகைய பாவ விதைகளை விதைத்துவிட்டது.

பா.ஜனதா மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தங்கள் பக்கம் உள்ள அதீத நம்பிக்கையில் அப்படி கூறியிருக்குமாயின் மராட்டியத்தில் உள்ள 48 தொகுதிகளிலும் அக்கட்சி வெல்ல வாய்ப்புள்ளது. ஏன் லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட பா.ஜனதாவின் தாமரை மலரும். ஆனால் அப்போதும் அயோத்தியில் ராமர் கோவில் ஏன் கட்டவில்லை என்று அவர்கள் சொல்லவேண்டி இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story