மோட்டார் சைக்கிள்– பஸ் மோதல் வாலிபர் சாவு
நெட்டப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு வாலிபர் பரிதாபமாகச் செத்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
பாகூர்,
நெட்டப்பாக்கத்தை அடுத்த பண்டசோழநல்லூர் நடுநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 21). அதே பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (19), இவர்கள் இருவரும் தனியார் கம்பெனி ஊழியர்கள். நேற்று மாலை 5 மணியளவில் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஏரிப்பாக்கம் வழியாக பண்டசோழநல்லுார் நோக்கி சென்றனர்.
அப்போது புதுச்சேரியிலிருந்து நெட்டப்பாக்கத்திற்கு வந்த பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நெட்டப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று அவர்கள் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்தார். சோமசுந்தரம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.