அனல்மின் நிலைய ஊழியர் வெட்டிக்கொலை உடலை கிணற்றில் வீசிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மீஞ்சூரில் வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உடலை கிணற்றில் வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்குன்றம்,
மீஞ்சூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 27). வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு வருகிற 22-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இவர் தன்னுடன் வேலை செய்யும் சக ஊழியரின் மகள் திருமணத்திற்காக கடந்த 10-ந் தேதி மீஞ்சூர் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ஆனால் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் லட்சுமணன் கிடைக்கவில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் லட்சுமணனை தேடி வந்தனர்.
இதற்கிடையே திருமண மண்டபத்திற்கு அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் ஒரு பிணம் கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் மாயமான லட்சுமணன் என்பது தெரியவந்தது. அவரது தலையில் வெட்டுக்காயம் இருந்தது. எனவே மர்மநபர்கள் லட்சுமணனை வெட்டிக்கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதனையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story