முல்லைப்பெரியாற்றில் அனுமதியின்றி தண்ணீர் எடுக்க பயன்படுத்திய 60 மின்மோட்டார்கள் பறிமுதல்
முல்லைப்பெரியாற்றில் அனுமதியின்றி தண்ணீர் எடுக்க பயன்படுத்திய 60 மின்மோட்டார்களை சப்-கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உத்தமபாளையம்,
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு அணை பாசனம் மூலம் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த பகுதிகளில் 2-ம் போகம் பயிரிட்ட நெல் பயிர்கள் நன்கு வளர்ந்து பால்பிடிக்கும் தருவாயில் உள்ளது. எதிர்பார்த்த மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116.05 அடியாக உள்ளது.
இதில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியை பொறுத்தவரை நெல் பயிர்களுக்கு குறைந்தது 40 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதைதவிர கோடைகாலங்களில் குடிநீருக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியில் முல்லைப்பெரியாற்றில் திறக்கப்படும் தண்ணீரை சிலர் அனுமதியின்றி மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுத்து வருவதாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதனுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சப்-கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் உதயராணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தமபாளையம் பகுதியில் முல்லைப்பெரியாற்றில் கோகிலாபுரம், அனுமந்தன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதிகளில் அனுமதியின்றி தண்ணீர் எடுக்க 60 மின்மோட்டார்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. உடனே அந்த குழாய்களை துண்டித்து 60 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியில் ஆற்றில் தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சப்-கலெக்டரிடம் கேட்டபோது, முல்லைப்பெரியாற்றில் அனுமதியின்றி தண்ணீர் எடுத்தது தெரிவந்தது. நேற்று மட்டும் 60 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் நாளை (இன்று) கூடலூரில் தொடங்கி லோயர்கேம்ப் வரை முல்லைப்பெரியாற்றில் சோதனை செய்யப்பட உள்ளது. ஆற்றில் இருந்து அனுமதியின்றி தண்ணீர் எடுத்தால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
Related Tags :
Next Story