உரசியதில் குழந்தைகளுடன் வாய்க்காலில் விழுந்த தொழிலாளி தனியார் பஸ்சை வழிமறித்து பொதுமக்கள் மறியல்


உரசியதில் குழந்தைகளுடன் வாய்க்காலில் விழுந்த தொழிலாளி தனியார் பஸ்சை வழிமறித்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 12 Feb 2019 11:00 PM GMT (Updated: 12 Feb 2019 5:42 PM GMT)

தனியார் பஸ் உரசியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி தனது 2 குழந்தைகளுடன் வாய்க்காலில் விழுந்தார். இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த பஸ்சை வழிமறித்து மறியலில் ஈடுபட்டனர்.

ஜீயபுரம்,

கரூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை திருச்சி நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் இடம் இல்லாததால் சிலர் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே வந்தனர். அந்த பஸ், ஜீயபுரம் அல்லூர் மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது, அல்லூர் பகுதியை சேர்ந்த திலகர் என்ற விவசாய தொழிலாளி தன்னுடைய 2 குழந்தைகளை பள்ளி வாகனத்தில் ஏற்றி விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

திருச்சி–கரூர் சாலையை அவர் அடைந்தபோது, எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது உரசியதில், நிலை தடுமாறிய திலகர் தனது 2 குழந்தைகளோடு அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்தார்.


 இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை மீட்டனர். பின்னர், மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற பஸ்சை மடக்கி பிடிக்க அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த பஸ் மத்திய பஸ் நிலையம் சென்று விட்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

 உடனே, அல்லூரில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் பஸ்சை வழிமறித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் சப்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினனைரயும் சமரசம் செய்து அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் திருச்சி–கரூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story