ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு ‘சீல்’
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு ஊட்டி நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது சீல் வைத்து வருகிறார்கள். கடந்த வாரம் 15 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஊட்டி மெயின் பஜாரில் வீட்டுக்கு என அனுமதி பெற்று தரை தளத்தில் கடை, 1 மற்றும் 2-வது மாடியில் வீடுகள் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு ‘சீல்‘ வைக்க ஊட்டி நகராட்சி அதிகாரிகள் நேற்று சென்றனர். அப்போது பொதுமக்கள் சிலர், அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்க விடாமல் தடுத்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதையடுத்து நகராட்சி திட்டமைப்பு அலுவலர் இளங்கோவன், கட்டிட ஆய்வாளர் மீனாட்சி அந்த கட்டிடத்தில் உள்ள 5 அறைகளை பூட்டி ‘சீல்‘ வைத்தனர். பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக கடைக்கு சீல் வைக்காமல் நகராட்சி கமிஷனருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் நாராயணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த கடையை பூட்டி ‘சீல்‘ வைத்தார். பின்னர் நோட்டீசு ஒட்டப்பட்டது. விதிமுறை மீறி கட்டப்பட்ட 3 வீடுகளுக்கு நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு ‘சீல்‘ வைக்க சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story