அய்யலூர் சந்தையில் வரத்து காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை


அய்யலூர் சந்தையில் வரத்து காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 13 Feb 2019 4:15 AM IST (Updated: 12 Feb 2019 11:26 PM IST)
t-max-icont-min-icon

அய்யலூரில் உள்ள தக்காளி சந்தையில் வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வடமதுரை, 

வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் தக்காளிக்கு என்று தனிச்சந்தை உள்ளது. வடமதுரை, அய்யலூர் சுற்று வட்டார கிராமங்களில் அறுவடை செய்யப்படும் தக்காளிகள் சந்தைக்கு விற்பனக்கு கொண்டு வரப்படுகிறது. இதுதவிர வெளிமாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

இதனால் மாவட்டத்தில் தக்காளியின் விலையை நிர்ணயிக்கும் சந்தையாக அய்யலூர் திகழ்கிறது. இங்கிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் தக்காளி அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 4 டன் வரை தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஆனால் கடந்த சில நாட்களாக அய்யலூர் சந்தையில் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை தொடர்ந்து இறங்கு முகமாக உள்ளது. கடந்த வாரம் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.150 முதல் ரூ.170 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்தது. செடிக்கு தண்ணீர் பாய்ச்சி, உரம் போட்டு பாதுகாத்து வளர்த்து, சந்தைக்கு கொண்டு வரும் கூலி கூட மிஞ்சுவதில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர். இதனால் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விலை கிடைக்காத காலங்களில் தக்காளி வீணாவதை தடுக்க அய்யலூரில் குளிர்பதன கிட்டங்கி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story