கணவர் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாளில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை சென்னிமலையில் பரிதாப சம்பவம்


கணவர் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாளில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை சென்னிமலையில் பரிதாப சம்பவம்
x
தினத்தந்தி 13 Feb 2019 4:45 AM IST (Updated: 13 Feb 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலையில், கணவர் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாளில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் பரிதாபமாக தற்கொலை செய்துகொண்டார்.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை காட்டூர் ரோட்டை சேர்ந்தவர் துரைகந்தசாமி (வயது 48). இவருடைய மனைவி மகேஸ்வரி (38), மகன் ஹரிபிரசாத் (15).

துரைகந்தசாமி மறைந்த பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ வி.என்.சுப்பிரமணியத்தின் தம்பி ஆவார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த துரைகந்தசாமி கடந்த ஆண்டு இதே நாளில் (அதாவது நேற்று) இறந்துவிட்டார். மகேஸ்வரி மகனுடன் வசித்து வந்தார். ஹரிபிரசாத் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.

கணவர் இறந்த நாளில் இருந்தே அவருடைய பிரிவை தாங்க முடியாமல் மகேஸ்வரி மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று துரைகந்தசாமியின் முதலாம் ஆண்டு நினைவு நாளாகும். அதனால் அக்கம் பக்கத்தினரிடம் மகேஸ்வரி, என் கணவருடைய பிரிவை என்னால் தாங்க முடியவில்லை. அவர் இறந்த இந்த நாளில் நாங்களும் உயிரைவிட்டு அவருடன் சேர்ந்துவிடுவோம்‘ என்று சொல்லி புலம்பியுள்ளார். அவர்கள், மகேஸ்வரிக்கு ஆறுதல் சொல்லி உள்ளார்கள்.

இதற்கிடையே நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டுக்குள் இருந்து சத்தம் போட்டபடி ஓடிவந்த மகேஸ்வரி என் மகனுக்கு வி‌ஷம் கொடுத்துவிட்டு நானும் குடித்துவிட்டேன் என்று கூறி மயங்கி விழுந்துவிட்டார்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் ஓடிச்சென்று பார்த்தார்கள். அங்கு ஹரிபிரசாத்தும் மயங்கி கிடந்தார். உடனே 108 ஆம்புலன்சை வரவழைத்து இருவரையும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.

அங்கு டாக்டர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு 7 மணி அளவில் ஹரிபிரசாத் இறந்துவிட்டார். அதன்பின்னர் 7.30 மணி அளவில் மகேஸ்வரியும் உயிரிழந்தார்.

இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில், கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இருந்த மகேஸ்வரி நேற்று மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் சென்னிமலை பகுதியில் நேற்று சோகத்தை ஏற்படுத்தியது.

மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்ற மகேஸ்வரி நேற்று காலை கணவரின் இறந்தநாளையொட்டி திதி கொடுப்பதற்கு நினைத்தார். அதற்காக வேதவிற்பன்னர் ஒருவரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் கண்ணீர் விட்டு அழுத மகேஸ்வரி பக்கத்து வீட்டுக்காரர்களிடம், ‘என் கணவருக்கு திதி கொடுக்க கூட என்னால் முடியவில்லை. பரவாயில்லை நானும், என் மகனும் இறந்துவிடுவோம். அதன்பின்னர் நேரில் சென்றே என் கணவருக்கு திதி கொடுத்துவிடுகிறேன். நாங்கள் இறந்த பின்னர் எங்களுடைய உடல்களை என் கணவரை புதைத்த இடத்திலேயே புதைத்துவிடுங்கள்‘ என்று கூறி கண்ணீர் விட்டுள்ளார். அதற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள், கணவர் இறந்த துக்கத்தினால் இப்படி பேசுகிறார் என்று நினைத்து அவருக்கு சாதாரணமாக ஆறுதல் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நேற்று மாலை அவர் சொன்னது போலவே தற்கொலை செய்து கொண்டதை நினைத்து அவர்களும் கண்ணீர் சிந்தினார்கள்.


Next Story