பஸ் டெப்போவை மூடுவதற்கு கண்டனம்: சாத்தான்குளத்தில் கடைகள் அடைப்பு


பஸ் டெப்போவை மூடுவதற்கு கண்டனம்: சாத்தான்குளத்தில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 13 Feb 2019 3:30 AM IST (Updated: 13 Feb 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் உள்ள பஸ் டெப்போவை மூடுவதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

சாத்தான்குளம், 

சாத்தான்குளத்தில் உள்ள பஸ் டெப்போவை மூடுவதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

பஸ் டெப்போ

சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு அரசு பஸ் டெப்போ அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் முடிந்து கடந்த 2017-ம் ஆண்டு டெப்போ திறக்கப்பட்டது. நெல்லை, திருச்செந்தூர், திசையன்விளை, பெரியதாழை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் இந்த டெப்போவுக்கு வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு எளிதில் போக்குவரத்து சேவை கிடைத்து வந்தது.

இந்த நிலையில் டெப்போவில் பஸ்களுக்கு வழங்கப்படும் டீசல் வசதி நிறுத்தப்பட்டதால், டெப்போவில் இயங்கிய 6 பஸ்கள் நிறுத்தப்பட்டன. தற்போது டெப்போவை மூடிவிட்டு, அங்கு வந்து செல்லும் அரசு பஸ்களை திருச்செந்தூர் அல்லது திசையன்விளையில் உள்ள பஸ் டெப்போவிற்கு வந்து செல்ல ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு வியாபாரிகள், பொதுமக்கள், அனைத்து கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடைகள் அடைப்பு

டெப்போவை மூடுவதற்கு கண்டனம் தெரிவித்து சாத்தான்குளம் பகுதியில் நேற்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி சாத்தான்குளம் பஜார் பகுதிகளில் நேற்று சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சில மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு வியாபாரிகள், பொதுமக்கள் பலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 3 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் ஜோசப், அனைத்து மக்கள் நல அமைப்பின் பொறுப்பாளர் மகா பால்துரை, வர்த்தக சங்க தலைவர் துரைராஜ், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க செயலாளர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள், திருச்செந்தூர் உதவி கலெக்டர் இடமாறுதல் பெற்றுள்ளார். எனவே புதிய உதவி கலெக்டர் வந்ததும், வருகிற 20-ந்தேதிக்குள் சமாதான கூட்டம் நடத்தப்படும். அதில் பஸ் டெப்போவை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story