தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்
தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாவின் கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும் என்று தேசிய செயலாளர் முரளிதரராவ் கூறினார்.
கோவை,
பாரதீய ஜனதா கட்சி சார்பில் ‘மன்கிபாத்’ என்ற நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன்படி தொழில்முனைவோர், தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரது கோரிக்கை கள் அடங்கிய மனுக்களை பெறுவதற்காக பெட்டி வைக்கப்படும். அதில் போடப்படும் மனுக்களின் அடிப்படையில் பாரதீய ஜனதாவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படு கிறது.
இதன்படி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளித் துறையினருடன் கலந்துரையாடல் கூட்டம் கோவை இந்திய தொழில் வர்த்தகசபை அரங்கில் நடைபெற்றது. இதில் தொழில் வளர்ச்சிக்கான கோரிக்கை மனுக்கள் பெட்டியில் போடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளும், தொழில்முனைவோரும், தொழிலாளர்களும் இரட்டிப்பு பலன் அடைவதற்காக மத்திய பாரதீய ஜனதா அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறையின் வளர்ச்சிக்காகவும், நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டியும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், அருணாசலபிரதேசம் முதல் குஜராத் வரையும் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி 10 கோடி பேரை சந்தித்து மனுக்களை பெற்று தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளோம்.
பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள், மாநில பாரதீய ஜனதா தலைவர்கள் உள்பட பலரும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார்கள். கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகள் ஜவுளித்தொழில் மற்றும் விவசாயம் சிறந்து விளங்கும் பகுதியாகும். தொழில் முனைவோரும், தொழிலாளர்களும் அதிகம்பேர் உள்ளனர்.
ஊரக பகுதிகளுக்கும் ஜவுளி மற்றும் விவசாயம் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. கோவையில் நடந்த நிகழ்ச்சியில் ஜவுளிதொழிலில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சிக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடியும் கடந்த 10-ந்தேதி திருப்பூருக்கு வந்து திட்டங்களை தொடங்கி வைத்து மக்களை சந்தித்து சென்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும். அரசியல் கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து பாரதீய ஜனதா கட்சி விரைவில் முறைப்படி அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நிருபர்கள், தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில், துணைசபாநாயகர் தம்பிதுரை பேசும்போது, பாரதீய ஜனதாவின் திட்டங்கள் தோல்வி அடைந்து விட்டன என்று கடுமையாக விமர்சித்து உள்ளாரே? அது குறித்து என்ன கூறுகிறீர்கள்? என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து முரளிதரராவ் பேசும்போது, தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்தநிலையில் தனிப்பட்டவர்களின் பேச்சு குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. தம்பிதுரை நாடாளுமன்றத்தில் பேசியது குறித்து அ.தி.மு.க. எந்த கருத்தையும் வெளியிடாத நிலையில் நான் இந்தபிரச்சினையில் குறுக்கிட விரும்பவில்லை என்றார்.
முன்னதாக ஜவுளித்துறையினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜவுளித்துறையின் வளர்ச்சிக்காக ஜி.எஸ்.டியை குறைப்பதுடன், ஏற்றுமதி சலுகையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று தொழில்முனைவோர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய கயிறுவாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர் நந்தகுமார், முன்னாள் எம்.பி. கார்வேந்தன், மோகன் மந்த்ராச்சலம், ஜி.கே.நாகராஜ், ஜவுளிதொழில்முனைவோர் கூட்டமைப்பு ஒருங் கிணைப்பாளர் பிரபு தாமோதரன், சைமா செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story