சின்னதம்பி யானையை முகாமில் அடைக்க கடும் எதிர்ப்பு


சின்னதம்பி யானையை முகாமில் அடைக்க கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 12 Feb 2019 10:45 PM GMT (Updated: 12 Feb 2019 7:53 PM GMT)

சின்னதம்பி யானையை முகாமில் அடைக்க வன ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அந்த யானையை முதுமலை வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை,

கோவை அருகே உள்ள கணுவாய், தடாகம், மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்த சின்னதம்பி காட்டு யானை கடந்த மாதம் 25-ந் தேதி வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை லாரியில் ஏற்றப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது.

ஆனால் சின்னத்தம்பி யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி தற்போது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே முகாமிட்டு உள்ளது. கும்கி யானைகள் மூலம் துரத்தினாலும் அந்த யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் கரும்புக்காட்டில் சுற்றி வருகிறது.

எனவே சின்னதம்பி யானையை பிடித்து கும்கியாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு வன ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் தொடரப் பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சின்னதம்பி யானை வனப்பகுதிக்குள் செல்லாததால், அதை முகாமில் அடைப்பதை தவிர வேறு வழி இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த யானையை முகாமில் அடைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை முகாமில் அடைத்தால் கும்கியாக மாற்ற வாய்ப்பு உள்ளது. எனவே அதை முகாமில் அடைக்கக்கூடாது என்றும், அதை பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட வேண்டும் என்றும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து கோவையில் உள்ள இயற்கை பாதுகாப்பு சங்க தலைவர் ஜலாலுதீன் மற்றும் வன ஆர்வலர்கள் கூறியதாவது:-

பொதுவாக சமவெளி பகுதியில் வளர்ந்த யானையை மலைகள் அதிகம் உள்ள பகுதியில் விட்டால் அங்கு இருக்காது. உடனே வெளியே வந்து விடும். அதுபோன்று தான் சின்னதம்பி யானையும் சமவெளி பகுதியில் அதிகம் இருந்துள்ளது. அதை மலைகள் அதிகம் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விட்டதால் வெளியே வந்து விட்டது.

ஆனால் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியை அதிகம் கொண்டது. அங்கு பந்திப்பூர், வயநாடு மற்றும் கபினி என்று தொடர்ந்து வனப்பகுதிகள் இருக்கிறது. இதனால் தான் தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்டு முதுமலையில் விடப்பட்ட விநாயகன் யானை வெளியே வரவில்லை. வனப்பகுதிக்கு உள்ளேயே இருக்கிறது.

எனவே சின்னதம்பி யானையை முதுமலையில் விட்டால் வனப்பகுதிக்குள்ளேயே இருந்து விடும். வெளியே வர வாய்ப்பு இல்லை. ஆனால் அதை செய்யாமல் சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்போம் என்பதை ஏற்க முடியாது. முகாமில் அடைத்தால் பின்னர் கும்கியாக மாற்றி விடுவார்கள்.

வனத்துறை அதிகாரிகள் பலருக்கும் சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை. வனப் பகுதியில் விடுவதற்கு தான் விருப்பம் இருக்கிறது. தற்போது வனப்பகுதியிலேயே 30 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்ற எண்ணிக்கை தான் இருக்கிறது. அதுவும் சின்னதம்பி யானை திடகாத்திரமானது. இந்த யானையை வனப்பகுதியில் விட்டால் இனப்பெருக்கம் அதிகரிக்கும்.

அது போன்று யானைகள் தொடர்பாக ஆய்வு செய்பவர்களிடம் ஆலோசனை கேட்டு செயல்பட வேண்டும். சின்னதம்பி யானையை, முதுமலை வனப்பகுதியில் விட்ட பிறகு மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்தால் அதை பிடிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் சின்னதம்பி யானையை பாதுகாக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் எங்களையும் வாழ விடுங்கள் என்ற வாசகம் பொறித்த விளம்பர பதாகைகள், தடாகம், சோமையம்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ளன. 

Next Story