அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜர்: ‘என்மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்’ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி


அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜர்: ‘என்மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்’ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
x
தினத்தந்தி 12 Feb 2019 11:00 PM GMT (Updated: 12 Feb 2019 7:57 PM GMT)

அவதூறு வழக்கில் திருச்சி கோர்ட்டில் ஆஜரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ‘என்மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்’ என்று தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் தடுப்பணையில் உள்ள 9 மதகுகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி இரவு இடிந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த நிலையில் அதே மாதம் 26-ந் தேதி திருச்சிக்கு வந்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ‘தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு முக்கொம்பு கொள்ளிடம் அணையை இடித்தார் களா? என்ற சந்தேகம் எழுகிறது’ என பேட்டியளித்திருந்தார்.

அவரது பேட்டியானது தமிழக அரசின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இருப்பதாக கூறி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தமிழக அரசு சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு மற்றும் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அரசு வக்கீல் சம்பத்குமார் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, திருச்சி கோர்ட்டில் ஆஜராவதற்காக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று காலை 10 மணிக்கு கோர்ட்டு வளாகத்துக்கு காரில் வந்திறங்கினார். அவரை திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஜவகர், கலைச்செல்வன், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் காலை 10.45 மணிக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி குமரகுரு முன்னிலையில் ஆஜரானார். அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 14-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்

என் மீது வழக்கு தொடர முதல்-அமைச்சர் தகுதியுடையவர் அல்ல. முதல்-அமைச்சர் லஞ்சம் வாங்குவது குறித்துதான் இதுவரை பேசி வந்தேன். இனி கோடநாட்டில் நடந்த 5 கொலைகளுக்கும் அவர்தான் காரணம் என பேசுவேன். அதற்கும் என்மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், அதை சந்திக்க நான் தயாராக உள்ளேன்.

என்னை பொறுத்தவரை ஜெயலலிதா போட்ட வழக்குகளையே சந்தித்தவன் நான். இதுபோன்ற வழக்குகளை கண்டு அஞ்சமாட்டேன். கோடநாட்டில் நடந்த 5 கொலைகள் மட்டுமல்ல, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்குகள் குறித்துகூட பேசுவேன்.

திருப்பூர் வந்த பிரதமர் நரேந்திரமோடி, காமராஜர் ஆட்சி பற்றி பேசினால் வெற்றி பெற்று விடலாம் என நினைத்து பேசி இருக்கிறார். காமராஜர் பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி உள்ளது?. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக காமராஜர் இருந்தபோது, அவரை கொல்ல முயன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ்சும் அவருடைய சகாக்களும்தான். எனவே, அந்த பாசறை வழிவந்த மோடிக்கு காமராஜர் குறித்து பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. மத்தியில் மீண்டும் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சிதான் அமையும் என்று சொல்வது, பஸ் நிலையத்தில் நின்று கொண்டு மனநிலை பாதித்தவர் நான்தான் ராஜா.. நான்தான் ராஜா.. என்று சொல் வதுபோல இருக்கிறது.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிரி சிறப்பாக செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story