திருநல்லூரில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்


திருநல்லூரில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
x
தினத்தந்தி 13 Feb 2019 4:30 AM IST (Updated: 13 Feb 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

திருநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் மல்லுக்கட்டி அடக்கினர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை அடுத்த திருநல்லூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து வாடி வாசல் அமைக்கும் பணி, பார்வையாளர்களுக்கான இடம், முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கான இடம், காளைகள் வெளியேறும் இருபுறங்களிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்தன.

மேலும் முத்துமாரியம்மன் கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை கலெக்டர் கணேஷ் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின்னர் வாடிவாசலில் இருந்து அலங் கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 180-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த சில காளைகளுடன் மல்லுக்கட்டி அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 700-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் விராலிமலையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 30), நாக்கத்தான்பட்டியை சேர்ந்த கோகுல் (22), சீத்தப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (21), மணப்பாறையை சேர்ந்த சேவியர் (28), திருச்சியை சேர்ந்த ரவி (25), தஞ்சாவூரை சேர்ந்த செந்தில்குமார் (43), தென்னலூரை சேர்ந்த மாரிமுத்து (35) உள்பட 33 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 9 பேர் மேல்சிகிச்சைக்காக விராலிமலை, திருச்சி, புதுக்கோட்டை, மணப்பாறை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டாட்சியர் ஜெய பாரதி, வட்டாட்சியர் சோனை கருப்பையா, தென்னலூர் பழனியப்பன் மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், திருநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டி நிபந்தனைகளின் படி முறையாக நடைபெறுகிறதா என்பதை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், அரசு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலச்சந்திரன் தலைமையில் இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சி, மணப்பாறை, விராலிமலை, புதுக்கோட்டை, இலுப்பூர் போன்ற பகுதிகளில் இருந்து திருநல்லூருக்கு சிறப்பு பஸ்கள் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. 

Next Story